நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டத்திலும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறும்.
இந்த சீசனில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டம் சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி ஆட்டமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், இதில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்த சீசனில் இதுவரை களமிறங்கவில்லை. அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்தது. முதலில் இரண்டு வார காலம் ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது காலவரையின்றி நீடிக்கிறது. சில ஆட்டங்களுக்கு முந்தைய நாளன்று அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் தோனி, போட்டி நடைபெறும் நாளன்று தலை காட்டுவதில்லை.
சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு பயிற்சியாளர்கள் முதல் சக வீரர்கள் வரை அது தங்களுக்கு தெரியாது என்றே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் ஆடும் லெவனில் இடம்பெறும் முடிவு தோனியின் வசம் இருப்பதாகவே தெரிகிறது.
ஒன் லாஸ்ட் டைம்:
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் நடைபெறும் ஆட்டம்தான் இந்த சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டம். அதனால் இதில் தோனி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் தோனியும் பயிற்சியில் ஈடுபட்டார். சுமார் 15 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சியில் அவர் கவனம் செலுத்தினார். அவர் தங்களுடன் பயிற்சி செய்வது சிறந்த அனுபவமாக இருந்தது என சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஆட்டம் என்பது 2019 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம்தான். நியூஸிலாந்து உடனான அந்த ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார் தோனி. கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதள பதிவில் தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு 2021, 2023 சீசனில் சிஎஸ்கே அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை சக அணி வீரரிடம் ஒப்படைப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். இப்போது அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
கடந்த 2021-ல் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற போது சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாவில் தனது கடைசி ஆட்டம் சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என்றார். அந்த வகையில் ‘இன்று நடைபெறும் ஆட்டம் தோனியின் கடைசி ஆட்டமாக இருக்குமா?’ என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள், ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான விடையை தோனி தருவார் என நம்புவோம்.
