திமுக சிட்டிங் எம்.பி.க்களில் யார் யாருக்கு ‘நோ என்ட்ரி’? – உள்ளரசியல் நிலவரம்

0
138

கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் திமுக நடத்திய ‘ரகசிய சர்வே’ முக்கியப் பங்கு வகிக்கிறது. திமுக நடத்திய ரகசிய சர்வேயில், வடசென்னை கலாநிதி வீராசாமி, சேலம் பார்த்தீபன், திருநெல்வேலி ஞானதிரவியம், வேலூர் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, திருவண்ணாமலை அண்ணாதுரை ஆகியோர் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களுக்கு மீண்டும் திமுக தலைமை வாய்ப்பு தருமா என்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது.

அதேபோல், தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமார், வட மாநிலம் குறித்து பேசியதும் அரசு நிகழ்ச்சியில் சாமி படம் இருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் சர்ச்சையானது. இதனால் ‘இம்முறை அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது’ என, திமுக சீனியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திமுகவின் கொள்கைகளை களத்தில் தீவிரமாகப் பேசி வரும் செந்தில்குமாருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு வேறு கருத்து நிலவுவதால், அவரது பெயர் சந்தேகப் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூரில் தொடர்ந்து பழனி மாணிக்கத்துக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே சொல்கின்றனர். பொள்ளாச்சி தொகுதி எம்பியாக இருக்கும் சண்முக சுந்திரமும் மீண்டும் வாய்ப்புக் கேட்டு வருகிறார். ஆனால், அவரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லாததால் மீண்டும் அவருக்கு வாயப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இம்முறை வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இளைஞர் அணி மாநாட்டு மேடையிலேயே ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஐடி விங் மற்றும் இளைஞர் அணியில் இருந்து சிலரது பெயர்களை அவர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உதயநிதியின் தலையீட்டால், டெல்லியில் திமுகவின் முகமாகச் செயல்படும் சீனியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக, சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இருக்காது. இதனால், சொந்தக் கட்சியில் சர்ச்சை வெடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here