இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் நாங்கள் மீண்டு வருவோம் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவதாக தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டி20 போட்டி நாளை (அக்டோபர் 27) வெலிங்டனில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர் குறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல் 2 போட்டிகளிலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஆனால் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வீரர்கள் வெற்றி பெறுவதற்கு உதவியிருக்கக்கூடிய சில முக்கியமான வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டனர். இருப்பினும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் நான் திருப்தி அடைந்துள்ளேன். முதல் 2 இரண்டு போட்டிகளுமே நியூஸிலாந்துக்குச் சாதகமாக முடிந்திருக்க வாய்ப்பு இருந்தது.
டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிகக் குறைவு. 2 போட்டிகளிலுமே நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனாலும், அது நடக்கவில்லை. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் அதிகப் போட்டிகளில் விளையாடவில்லை.
கடைசியாக நியூஸிலாந்து அணி கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சுமார் 80 சதவீத நேரம் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினோம். ஆனால், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் நாங்கள் தவறிவிட்டோம். இது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தத் தொடரில் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அவற்றில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டு வருவோம்.
தற்போது வரும் 27-ம் தேதி வெலிங்டனில் நடைபெறவுள்ள 3-வது போட்டிக்காக நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
