5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் எஸ்எல் 3 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார் 21-18, 21-16 சகநாட்டைச் சேர்ந்த பிரமோத் பகத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 2 முறை தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் இம்முறை வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளை குவித்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் சுவீடனின் அனா பென்சன் 356 புள்ளிகளை குவித்ததே சாதனையாக இருந்தது. நடப்பு தொடரில் மோனா அகர்வால் வெல்லும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 பிரிவிலும் அவர், தங்கம் வென்றிருந்தார்.
வில்வித்தை
வில்வித்தையில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், விஜய் சுந்தி ஜோடி 5-1 என்ற கணக்கில் சீனாவின் யுன் டுவோ, ஜாவோ லிக்ஸ்யூ ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பாவ்னா சவுத்ரி, பூஜா ஜத்யான் ஜோடி 0-6 என்ற செட் கணக்கில் சீனாவின் காவோ ஸிஹான், வாங் சூச்சியான் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
சந்தீப்
ஆடவருக்கான 400 மீட்டர் டி 64 பிரிவில் இந்தியாவின் சந்தீப் பந்தய தூரத்தை 52.28 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சவுதி அரேபியாவின் நூர் அல்சனா (53.13) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் அஜய் குமார் (53.61) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 37/38 பிரிவில் இந்தியாவின் ஹேனி 60.49 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் டி 47 பிரிவில் இந்தியாவின் நிமிஷா 5.37 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிரமோத் பிஜார்னியா பந்தய தூரத்தை 4:09.65 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு எம்டி 4 பிரிவில் இந்தியாவின் ஜெஹன் டோரப் மதன், ஷுபம் வாத்வா ஜோடி தங்களது கடைசி ஆட்டத்தில் 0-3 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் பார்க் ஜின்சியோல், கிம் கியுங் ஹியுன் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இதில் ஜெஹன் டோரப் மதன் தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர்.
நேற்றைய நாளின் முடிவில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கங்களை குவித்து பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தது. ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா அதிக பதக்கங்களை குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என 106 பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது இந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
கிளப் த்ரோ
ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்தியாவின் பிரணவ் சூர்மா 32.87 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான தரம்வீர் (27.71) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப்42-44/61-64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் 72.46 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
நிறைவு விழாவில் கொடியை ஏந்துகின்றனர் மோனா, நிஷாத்
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் கடந்த 18-ம் தேதி ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நிறைவு விழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கப் பதக்கம் வென்ற மோனா அகர்வால் மற்றும் உயரம் தாண்டுதலில் 2 தங்கப் பதக்கம் வென்ற நிஷாத் குமார் ஆகியோர் ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
