கடந்த வாரம் 429 ரன்கள் எனும் பெரிய இலக்கையே தடுக்க முடியாமல் இலங்கையிடம் பேரடி வாங்கிய இங்கிலாந்து, நேற்று (அக்.25) லாகூரில் 241 ரன்களை தடுக்கும் போது பாகிஸ்தானை 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் என்று தோல்வியின் விளிம்புக்குக் கொண்டு சென்றது.
ஆனால் ஷதாப் கான் அதன் பிறகு ஆடிய ஆட்டம் உண்மையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். அவரது அதிரடி சதம், பாகிஸ்தானுக்கு நம்ப முடியாத வெற்றியை ஈட்டித் தந்தது.
அதுவும் பேட்டிங் என்றால் தட்டுத் தடுமாறும் ஹாரிஸ் ராவுஃபை வைத்துக் கொண்டு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷதாப் கான், தன அணிக்கு வெற்றி தேடி தந்தார். கடைசியில் அவர் 96 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 113 நாட் அவுட்டாகத் திகழ அவருக்கு உறுதுணையாக ஆடிய ஹாரிஸ் ராவுஃப் 19 பந்துகளைச் சந்தித்து வெறும் 7 ரன்களையே எடுத்திருந்தார். ஆனால் இந்த 7 ரன்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறும் என்பது உறுதி. எந்தவொரு வடிவத்திலும் பாகிஸ்தானுக்காக ஷதாப் கான் எடுக்கும் முதல் சதமாகும் இது.
காப்பாற்றிய ரெஃபரல்
கஸ் அட்கின்சன் பந்தை ஒரு முறை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸருக்குத் தூக்கிய ஷதாப் கான், ஒரு நேரடியான ஃபுல்டாஸைக் கால்காப்பில் வாங்க எல்.பி என்று நடுவர் கையை உயர்த்தினார். 221 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட். அவ்வளவுதான் பாகிஸ்தான் தோல்வி என்று நினைத்த வேளையில், ஷதாப் கானே விரக்தியில் மட்டையை ஓங்கி தரையில் அடிக்க முயன்றது எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த மாத்திரத்தில் அவர் தயக்கத்துடன் அதை ரிவ்யூ செய்தார்.
ஆனால், என்ன அதிசயம் என்னவென்றால் பந்து கால்காப்பைத் தாக்கும் முன் மட்டையின் உள்விளிம்பில் பட்டது தெரியவர, இங்கிலாந்து வெற்றி வாய்ப்பில் மண் விழுந்தது, ஷதாப் மீண்டார், வெற்றிக்கனியைப் பறித்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாஹின் ஷா அஃப்ரிடி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அவரே கேப்டனாக இங்கிலாந்து தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் விக்கெட்டை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் தன் 150-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை தொடக்கத்திலேயே திணறடித்ததால், அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பவர் பிளே ஓவர்களிலேயே அட்கின்சன் மற்றும் குரோகோம்ப் இணைந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து சொதப்பி வரும் பாபர் அஸம், அட்கின்சன் பந்தில் கிளீன் போல்டாகி 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷதாப் கான்
சாத் பைக் மற்றும் சல்மான் ஆகா இணைந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்பது போல் தெரிந்தது. ஆனால், அவர்களது கூட்டணியை 43 ரன்களில் ஜேமி ஓவர்டன் பிரித்தார். அதன்பின் அட்கின்சனும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசனும் நடுவரிசை பேட்டர்களை அடுத்தடுத்து வெளியேற்றினர். இதனால் பாகிஸ்தான் 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது அணியின் நிலைமையை உணர்ந்த ஷதாப் கான் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். அவரது அதிரடி ஆட்டமே போட்டியின் போக்கையே மாற்றியது. நெருக்கடியான சூழலில் அவர் எடுத்த முயற்சி இறுதியில் பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பென் டக்கெட் இல்லையென்றால் 241 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது. டக்கெட் அபாரமாக விளையாடி 105 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு வீழ்த்தினார். இங்கிலாந்தின் முதல் 5 பேட்டர்களில் 4 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்பின்னர் சாம் கரன், டக்கெட்டுக்கு ஓரளவு ஆதரவு அளித்தார். அவர் 52 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே டக்கெட், அராஃபத் மின்ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 187 ரன்களில் இருந்தது. ஆனால், அட்கின்சன் 28 பந்துகளில் 36 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி போராடக்கூடிய இலக்கை நிர்ணயித்தது. எனினும், ஷதாப் கானின் அதிரடி ஆட்டம் இங்கிலாந்தை மீண்டுமொரு முறை நொந்து நூலாகச் செய்தது.
