தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற அரசு இயந்திரத்தை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்து்கிறார் என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டி உள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராடியவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் குறிவைக்கப்படுகின்றனர். சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி இளைஞர்கள் தெருக்களில் போராடுகின்றனர். அவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
நேஹா, ஆயிஷா, விலாஜ், இஷா ஆகியோரும் இழுத்துச் செல்லப்பட்டனர். யாருக்காக? ஒரே ஒரு ஞானேஷ் குமாரைக் காப்பாற்றத்தான். சொந்த நாட்டு மக்கள் மீதே அரசு போர் தொடுத்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையரைக் காக்க பிரதமர் மோடி, அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தையும் (எஸ்ஐஆர்) கேள்வி எழுப்புகிறேன். 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வேறுபாடு 2 சதவீதமே. ஞானேஷ் குமார் பாஜகவுக்கு உதவுகிறார் என்று ஏன் சந்தேகிக்கக் கூடாது? இத்திருத்தத்தில் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்தேன்.
போராட்டங்களில் மாணவர்களும், மம்தா, அர்விந்த் கேஜ்ரிவால், பினராயி விஜயன் உள்ளிட்டோரும் அடங்குவர். நக்சல் பாதிப்பு பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இவை அனைத்தும் ஞானேஷ் குமாரைக் காக்கவே. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” வெறும் முழக்கம். அரசின் உண்மையான நோக்கம் “ஒரே நாடு, ஒரே கட்சி”. அவசரநிலையை அறிவிக்குமாறு மோடிக்குச் சவால் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.














