சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் சிறுமியர் பிரிவு இறுதிப் போட்டியில் புரசைவாக்கம் டெலக் மேக்டலின் 25-13, 24-26, 25-18 என்ற செட் கணக்கில் மயிலாப்பூர் லேடி சிவாமி பள்ளி அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 25-14, 25-13 என்ற செட் கணக்கில் கீழ்பாக்கம் கோல சரஸ்வதி அணியை தோற்கடித்தது.
சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் பெரம்பூர் டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி 25-15, 25-20 என்ற செட் கணக்கில் மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் முகப்பேர் வேலம்மாள் அணி 25-8, 25-16 என்ற செட் கணக்கில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
பரிசளிப்பு விழாவில் வருமான வரி ஆணையர் பாண்டியன், சுங்கத் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், ரோமா குழுமத்தைச் சேர்ந்த ஆர்.வி.எம்.ஏ.ராஜன் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொருளாளர் செல்வகணேஷ், சர்வதேச வாலிபால் வீரர்கள் நவீன் ராஜா ஜேக்கப், அஸ்வின் ராஜ் மற்றும் சென்னை மாவட்ட வாலிபால் சங்க பொருளாளர் பழனியப்பன், செயலாளர் கேசவன், துணைத்தலைவர் கோகலே, துணை செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.















