ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி

0
16

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அரை இறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி, நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று கோரோகி தடகளப் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரிவு அரை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஸ்மிருதி மந்தனா 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். குணாளன் கமலினி 3, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 40, ரிச்சா கோஷ் 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 3 பவுண்டரி, 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 15.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் நந்தனி சர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 3, சரணி 2, கிராந்தி கவுட், ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது. இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. வெண்கலத்துக்கான போட்டியில் பாகிஸ்தானும், வங்கதேசமும் மோத உள்ளன.

வரலாற்று சாதனை படைத்த ஷபாலி

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை புரிந்தார். சர்வதேச வெள்ளைப் பந்துப் போட்டிகளில் ஷபாலி வர்மா விளாசிய முதல் சதம் இதுவாகும். மேலும், ஆசிய போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். அவரது ஸ்கோரில் 9 இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.

ஸ்மிருதி மந்தனா சாதனை

டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா செய்துள்ளார்.நேற்று நடைபெற்ற வங்கதேசத்துடனான அரை இறுதிப் போட்டியின்போது ஸ்மிருதி மந்தனா 37 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அவர் டி20 போட்டிகளில் 171 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,788 ரன்கள் சேர்த்து முதலிடத்துக்கு முன்னேறினார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூஸிலாந்து வீராங்கனை சுஸி பேட்ஸ் 4,758 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது சுஸி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here