கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவிலுள்ள பிசிசிஐ திறன்மிகு பயிற்சி மைய (சிஓஇ) தலைவருமான விவிஎஸ் லஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விவிஎஸ் லஷ்மண் கூறியதாவது:
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலி ஒரு சிறந்த தொழில்முறை வீரராகத் திகழ்கிறார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. விராட் கோலி, தனக்கென சில மிக உயர்ந்த கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதன்படி களத்தில் செயல்படுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் தனது இலக்கையும், கொள்கைகளையும் எட்ட முயற்சிப்பதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் சக வீரர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அணியின் மற்ற வீரர்களும் தன்னைப்போல செயல்பட வேண்டுமென ஊக்கமளித்து வருகிறார். அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.
விராட் கோலி ஒரு சிறந்த தொழில்முறை வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தனக்கென வகுத்துக்கொள்ளும் தரநிலைகளை, எந்த அணிக்காக விளையாடினாலும் ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்ய அவர் முயற்சித்து வருகிறார்.
அதனால்தான் பல இளைஞர்களும், வீரர்களும் விராட் கோலியை பின்பற்ற விரும்புகின்றனர் என்று நான் நினைக்கிறேன்.
தான் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் தனது முழு திறனையும் வெளிப்படுத்த விராட் கோலி நினைக்கிறார். களத்தில் அவர் எப்போதுமே புதிதாக தோன்றுகிறார். அவர் உற்சாகமாக செயல்படுவது மட்டுமல்லாமல் களத்தில் சக வீரர்களையும் ஊக்குவித்து அவர்களை சிறந்து செயல்பட வைக்கிறார்.
காயங்கள் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக இருக்கின்றன. இதில் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. வீரர்கள் காயம் அடைவது தொடர்பாக யார் மீதாவது பழிசுமத்துவதை விட்டுவிட்டு, வீரர்களைக் கவனமாகக் கண்காணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்திய அணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அண்மையில் காயமடைந்து, உடல் தகுதி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். காயம் காரணமாக அவர்களால் அணியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சிகிச்சைக்கள், பயிற்சிகள் அளிக்கும் மையமாக பெங்களூரு திறன்மிகு மையம் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு சிஓஇ மையமானது, வீரர்களை வெறும் காயத்திலிருந்து மீட்கும் மையமாக மட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர்கள் களத்தில் சிறந்து விளங்க உதவுவதில் பெரிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு விவிஎஸ் லஷ்மண் தெரிவித்தார்.
