இலங்கை பிரதமர் லெவன் அணிக்கெதிரான 3 நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
கொழும்பு நகரில் உள்ள நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை பிரதமர் லெவன் அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்திருந்தது. தேவ்தத் படிக்கல் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி தனது முந்தைய நாள் ஸ்கோரான 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் என்ற நிலையிலேயே டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இலங்கை பிரதமர் லெவன் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிஷன் மதுஷ்கா அதிரடியாக விளையாடி 63 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ரவீந்திர ரசந்தா 8, பசிந்து சூரியபண்டாரா 4, சோனல் தினுஷா 9 ரன்கள் சேர்த்தனர். பவன் ரத்னாயகே 16 ரன்களும், அஞ்சலா பண்டாரா 35 ரன்களும், நிபுன் தனஞ்செயா 46 ரன்களும் குவித்தனர்.
இலங்கை பிரதமர் லெவன் அணி 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்திருந்தபோது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ரமேஷ் மெண்டிஸ் 16, கேஷரா நுவந்தா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் குர்னூர் பிரார் 2, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஷுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
ஷுப்மன் கில் 54 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களையும், 9 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். 61 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் வந்த ரிஷப் பந்த் 28, துருவ் ஜூரெல் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ரவீந்திர ஜடேஜா 22 ரன்களும், மானவ் சுதர் 4 ரன்களும் சேர்த்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினர். குர்னூர் பிரார் 2 ரன்கள் சேர்த்த நிலையில் ஆர். மெண்டிஸ் பந்துவீச்சில் சோனல் தினுஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சரண்ஷ் ஜெயின், முகமது சிராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் முகமது சிராஜ் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்து இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சரண்ஷ் ஜெயின் 2 ரன்களும், முகமது சிராஜ் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வரும் 15-ல் முதல் டெஸ்ட்
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
