போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரான் முடிவு? – ட்ரம்ப் அனுமதிக்காக காத்திருப்பு

0
24

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அந்த வகையில் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் இதற்கு அதிபர் ட்ரம்ப்பின் அனுமதி அவசியம் என்பதால் அதற்காக காத்திருப்பதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இன்னும் தங்கள் தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அது உறுதியானதும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நபர்கள் அந்நாட்டு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்னர். இதை TANSIM எனும் ஈரான் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில், தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் போர் பதற்றம் மேற்காசியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தற்போது இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளன.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா போர் நிறுத்த அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. தங்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குத இது என அமெரிக்கா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here