உ.பி.யின் ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் ராஜினாமா: பாலிவுட் படங்களில் நடித்தவர், அரசியலில் இறங்கவும் திட்டம்

0
222

உத்தரபிரதேசம் ஜோன்பூரை சேர்ந்தவர் அபிஷேக் சிங். 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் சொந்த மாநில கேடரில் பணியாற்றி வந்தார். திரைப்பட நாயகன் போன்று தனது தோற்றம் இருப்பதாக கருதும் அபிஷேக் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார். இவை வைரலாகி வந்த நிலையில், கடந்த 2015-ல்அயல்பணியாக டெல்லி மாநில அரசில் சேர்ந்து 5 வருடங்கள் பணியாற்றினார்.

கடந்த 2022-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது இவரை மத்திய பார்வையாளராக தேர்தல் ஆணையம் குஜராத் அனுப்பியது. அங்கு அபிஷேக் தனது பணியை குறிப்பிட்டு அரசு வாகனத்துடன் புகைப்படம் எடுத்து அதனைசமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையானது. இதனால் தேர்தல் ஆணையம் அவரை கடந்த 2022, நவம்பர் 18-ல் பார்வையாளர் பணியிலிருந்து நீக்கியது. மேலும் அபிஷேக் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் செய்தார்.

இதற்கிடையில் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார் அபிஷேக் சிங். இவர் நடித்த ‘டெல்லி கிரைம்’ எனும் இந்தி தொடர் நெட்பிளிக்ஸில் பிரபலமானது. அபிஷேக்கின் ‘சார் பந்த்ரா’ எனும் குறு ஆவணப்படமும் பிரபலம் அடைந்தது. தொடர்ந்து பிரபல நடிகை சன்னி லியோனுடன் ஒருபாப் பாடலிலும் அபிஷேக் நடித்தார். இப்பாடலை பிரபலப்படுத்தும் பொருட்டு அவர் சன்னி லியோனுடன் ஜோன்பூர் மற்றும் வாராணசியில் மேடை ஏறியதும் சர்ச்சையானது.

பிறகு கடந்த டிசம்பரில் தனது சொந்த ஊரான ஜோன்பூரில் நடைபெற்ற கணேஷ் மஹா உற்சவத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் சிலருடன் அபிஷேக் பங்கேற்றார். அவரது அழைப்பை ஏற்று மாநில பாஜக தலைவர்கள் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் ஜோன்பூர் தொகுதியில் அபிஷேக் போட்டியிட முயல்வதாக தகவல்கள் பரவின.

இத்தகவல் தற்போது உண்மை எனும் வகையில் அபிஷேக்கின் விருப்ப ஓய்வு மனு மத்திய பணியாளர் விவகார அமைச்சகத்தால் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனைவியும் ஐஏஎஸ் அதிகாரி: அபிஷேக்கின் மனைவி துர்கா சக்தி நாக்பாலும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் உ.பி.யின் பாந்தா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். அபிஷேக்கின் தந்தை கிருபா சங்கர் சிங், உ.பி.யின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

அபிஷேக் இனி பாலிவுட் திரையுலகில் தொடர்வதுடன் அரசியலிலும் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், அபிஷேக் பாஜகவில் இணையலாம் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here