நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: ரூ.41,000 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

0
190

நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் நாள்தோறும் 2 கோடி பேரும், ஓராண்டில் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டுரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆஸ்ட் 6-ம் தேதி அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

முதல்கட்டமாக கடந்த ஆண்டு 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்தமாக ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்கள், 1,500 மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமையும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களும் அந்தந்த பகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே நேரத்தில் 2,000 ரயில்வே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இது புதிய இந்தியாவின் அடையாளமாகும். சிறிய கனவுகளை காண்பதை இந்தியா நிறுத்திவிட்டது. இப்போது நாம் பெரிய கனவுகளை காண்கிறோம். அந்த கனவுகளை எட்ட இரவு, பகலாக உழைக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு ஜம்முவில் இருந்து ஐஐடி உள்ளிட்ட ஏராளமான உயர் கல்வி நிறுவனங்களை தொடங்கி வைத்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தேன்.

3-வது முறையாக பாஜக ஆட்சி: இன்றைய தினம் 553 ரயில் நிலையங்களின் மேம்பாடு, 1,500ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 3-வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஜூனில் மீண்டும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்குவோம். அப்போது இதைவிட வேகமாக பணிகள் நடைபெறும்.

பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பலன் அடைந்து வருகின்றனர். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறோம்.

சோழர் கால கட்டுமானம்: அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் ரயில் நிலையங்கள் அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய கட்டுமான கலைகளின் அடிப்படையில் கட்டப்படும்.

தமிழ்நாட்டில் கும்பகோணம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் நிலையம் சோழர் கால கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டப்படும். துவாரகதீசர் கோயில் கட்டுமானத்தின் அடிப்படையில் துவாரகா ரயில் நிலையம் மேம்படுத்தப்படும். ஒடிசாவின் புரியை சேர்ந்த ஜெகநாதர் கோயிலை மையமாக வைத்து அந்த மாநிலத்தின் பாலேஸ்வரர் ரயில் நிலையம் மறுசீரமைக்கப்படும்.

3-வது பெரிய பொருளாதார நாடு: கடந்த 2014-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம்.

நதிகள், அணைகள், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டால் வயல்களுக்கு தண்ணீர் செல்லாது. இதேபோல பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் நடைபெற்றால் அந்த நிதி மக்களை சென்றடையாது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை.

பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டப் பலன்கள் மக்களை முழுமையாக சென்றடைகின்றன. ஒரு பைசாகூட வீணாகாமல் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ரயில்வே திட்டங்களால் தொழிலாளர்கள் முதல் பொறியாளர்கள் வரை வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பலன் அடைந்து வருகின்றனர். சிமென்ட், உருக்கு, போக்குவரத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here