மும்பையில் உள்ள ஒரு தங்க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏதுமின்றி ஒரு மணி நேரத்தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகுதியில் ஒரு தங்க நகைக் கடன் நிறுவனம் உள்ளது. அதன் கடன் வழங்கும் மென்பொருள், வங்கியுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன் ஒப்புதலானதும், சிறப்பு மென்பொருள் இணைப்பு மூலம் வங்கிக்குத் தானாகவே தகவல் சென்றுவிடும் வசதி இருந்தது.
இதைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், கடந்த ஜூலை 13ம் தேதி அந்த மென்பொருளை ஊடுருவி, உண்மையான கடன் கோரிக்கை போன்றே போலியான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், நிறுவன அதிகாரிகளின் ஒப்புதலோ அல்லது ஓடிபியோ தேவையில்லாத வகையில், ஒரு மணி நேரத்தில் ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என மொத்தம் 18 முறை பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இவ்வாறு சுருட்டப்பட்ட ரூ.78.10 லட்சம் தொகை ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 14 அன்று வழக்கமான கணக்குச் சரிபார்ப்பின் போது, வாடிக்கையாளர்களுக்குத் தராத சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட உள் தணிக்கையில், இது சைபர் திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 16ம் தேதி ‘1930’ என்ற சைபர் உதவி எண்ணில் அந்நிறுவனம் புகார் அளித்தது. புகாரின் பேரில் 17ம் தேதி போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தற்போது, பணம் கைமாறிய வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிட்டுள்ள சைபர் க்ரைம் போலீஸார், இந்த கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
