வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மேலும் கடுமையான விதிகள் எப்சிஆர்ஏ சட்டத்தில் சேர்க்கப்பட்டன. தற்போது மேலும் 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்தது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்பார். எப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா குறித்து கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.
