பிரிட்டன் தேர்தல்: முந்தும் கீர் ஸ்டார்மர்; முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி

0
62

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ரிஷி சுனக் படுமோசமாக பின்தங்கியுள்ளார்.

கீர் ஸ்டார்மர் அவர் போட்டியிட்ட லண்டன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், “நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்; இனி நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என வாக்காளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

350+ தொகுதிகளில்.. இந்தத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி 418 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தம் உள்ள 650-ல் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கீர் ஸ்டார்மர் தரப்பு 350+ தொகுதிகளிலும், ரிஷி சுனக் தரப்பு வெறும் 82 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பிரிட்டனில் நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இந்நிலையில், லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளார் மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். 14 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 14 ஆண்டுக்குப் பிறகு இக்கட்சி ஆட்சியைப் பிடித்தால் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்பார்.