தாய்மாமன் சீர், அண்ணனின் சீர்வரிசை என தவெக அரசு பெண்களை மீண்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கி பழமைவாதத்துக்கு இழுத்துச் செல்லப் பார்க்கிறது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது.
பெண்கள் யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் சொத்துரிமை, கல்வி, வருமானம் பெற்று சுய மரியாதையுடன் சொந்தக் காலில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. ஆனால், தற்போதைய அரசு தாய்மாமன் சீர், அண்ணனின் சீர்வரிசை என்ற பெயரில் பெண்களை மீண்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கி, பழமைவாதத்திற்கு இழுத்துச் செல்லப் பார்க்கிறது.
மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும், குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளும் இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாயைச் செலவிட்டு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் விளம்பர அரசியலை செய்கிறார்கள். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் 14.7 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 5 சதவீதம் குறைந்துள்ளது. இது மாநிலத்தின் நிதி நெருக்கடியையும் பொருளாதாரச் சரிவையுமே காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
