முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கேங்மேன் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழக மின்வாரியம் தரப்பில் கடந்த நவ.21ம் தேதி 9,613 கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பணிக்கு மாற்றுவதற்கான கருத்துருவை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இது மட்டும் போதாது, பதவி மாற்றத்துக்கான இறுதி உத்தரவை வெளியிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
சென்னையில் கே.கே.நகர் கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலைய வளாகத்தில் நடந்த இப்போராட்டம் குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வில் 9,613 கேங்மேன்பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆனால் மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். கடந்த ஆட்சியில் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றுவதற்கான உத்தரவிடப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தற்போது புதிய ஆட்சி வந்து 7 மாதங்கள் ஆகியும் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டவில்லை. பல ஆண்டுகளாக கள உதவியாளர்களாக மாற்றுவதற்கான பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.
