ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கும் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை வரும் 8-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பழங்குடியின மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள் கொண்டவர்களாகவும் பிற சமூகங்களுடன் தொடர்பு கொள்ள கூச்சப்படுபவர்களாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். இதனால், பல இளைஞர்கள் தவறான வழியில் செல்கின்றனர்.
இந்நிலையில், பழங்குடியின இளைஞர்களை நல்வழிப்படுத்த 2006-ம் ஆண்டு முதல் பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறது. பிப்.8-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 18 முதல் 22 வயது வரையிலான 220 பழங்குடி இளைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
கலாச்சார நிகழ்வுகள்: அந்தவகையில், 7-ம் தேதி 20 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சென்னை வரும் அவர்களுக்கு, அன்றைய தினம் அறிமுகம் நிகழ்ச்சி, தீ மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. பின்னர் 8-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை பயணம், கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
பின்னர் 9-ம் தேதி சென்னை மத்திய ரிசர்வ் போலீஸ் படைத்தளத்தையும் 10-ம் தேதி சென்னை ஐஐடி-யையும் 11-ம் தேதி சாய்ராம் கல்லூரி, மாமல்லபுரத்தையும் பார்வையிடுகின்றனர். இதையடுத்து 12-ம் தேதி தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நடக்கிறது. அடுத்த நாளான 13-ம் தேதி தலைமைச் செயலகத்தை பார்வையிட அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.