பிப்.11-ல் போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை

0
44

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம், சிறப்பு பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-ம் தேதி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பணிநிரந்தரம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது தெரிகிறது. மேலும், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.2-ம் தேதி முதல் சென்னை தலைமைச் செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிப்.6-ம் தேதி (இன்று), தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் நடத்துவதா, இல்லையா என்பது தெரிவிக்கப்படும் என நிர்வாகிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here