நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டனர் என அவுரங்கசீப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிசபா கூட்டம் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியதாவது:
கர்நாடாகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மதப் அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அரசியல்சாசனம் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற இடஒதுக்கீடுகளை செய்பவர்கள், அரசியல்சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு எதிரானவர்கள். முஸ்லிம்களுக்கு மதஅடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இதற்கு முன் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றையெல்லாம் உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துவிட்டன.
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் நினைவிடம் சர்ச்சை எழுந்துள்ளது. அவுரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோ சமூக நல்லிணக்கத்தை நம்பினார். ஆனால், அவர் அடையாள சின்னமாக்கப்படவில்லை. இந்தியாவின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்ட அவுரங்கசீப் எல்லாம் அடையாள சின்னமாக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.