ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கில் ஆணவம் இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக மறைக்க செய்யவும் முயற்சிக்கக் கூடாது. எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இந்த விஷயத்தில் நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.
நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன். வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முதல் மூன்று ஆண்டுகளில், டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வழக்கமாக கீழ் வரிசையில் பேட்டிங் செய்யவே அனுப்பப்பட்டேன். அதனால், ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் என்னால் கவனம் ஈர்க்க முடியவில்லை. ஆனால் 2010-ம் ஆண்டில் நான் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தினேன்.
2010-ம் ஆண்டு முதல், நான் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினேன். தொடர்ந்து 2011-ம் ஆண்டு வாக்கில், நான் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தேன். அப்போதுதான் எனது ஐபிஎல் பயணம் உண்மையிலேயே வடிவம் பெறத் தொடங்கியது. ஐபிஎல் தொடர் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தினால் அது தனித்துவமானதாகவும், மிகவும் சவாலானதாகவும் இருக்கிறது.
இது ஒரு குறுகிய இருதரப்புத் தொடர் போன்றது அல்ல, பல வாரங்கள் நீடிக்கும். மேலும் புள்ளிகள் அட்டவணையில் உங்கள் நிலை மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து மாறும் அந்த சூழ்நிலை பல்வேறு வகையான அழுத்தத்தைக் கொண்டுவரும். இதனால்தான் மற்ற தொடர்களைவிட ஐபிஎல் தொடரின் இயல்பு மன ரீதியாக சவால் அளிக்கிறது. இதுதான் எனது டி 20 திறமையை வளர்க்கிறது” என்றார்.