ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில், 103 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்டத்தில் ஷஷாங் சிங் 36 பந்துகளில், 52 ரன்கள் விளாசி அசத்தினார்.
220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 36, ஷிவம் துபே 42 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். சிஸ்கே அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது.
போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: “எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. கேட்ச்களை தவறவிட்டோம். இரு அணியிலும் இது இருந்தது. மின்னொளியால் இது நிகழ்கிறதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக எங்களுக்கு அது கவலைக்குரிய பகுதியாகும்.
நேர்மறையான விஷயம் என்று பார்த்தால் பேட்டிங்கில் சற்று சிறப்பாக செயல்பட்டோம். டாப் ஆர்டரில் இருந்து எங்களுக்கு சில விஷயங்கள் கிடைத்தன. எங்களால் ரன் ரேட்டை ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல நிலையில் வைத்திருக்க முடியாமல் போனது. அது கடைசியில் அதிகமாக இருந்தது. பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்தில் இருந்தே சிறப்பாக விளையாடினார். கடந்த ஆட்டத்தில் அவர், முதல் பந்திலேயே ஆட்டமிழந்த நிலையில் இதுபோன்ற ஷாட்டை விளையாடுவது மிகவும் தைரியமான விஷயம். நாங்கள் செய்த தவறு பந்துகளை அதிக அளவில் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசியதுதான். பந்துகளை ஸ்டெம்புகளுக்கு நேராக வீசி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. இதன்படியே முதல் பந்து ஸ்டெம்புக்கு நேராக வீசப்பட்டது.
அடுத்த பந்தில் கேட்ச் வாய்ப்பை உருவாக்கினோம். அதை தவறவிட்டதே ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பீல்டிங்கில் மந்தமாக இருந்தோம். ஆர்யா சில அற்புதமான ஷாட்களை மேற்கொண்டதால் அழுத்தத்தில் இருந்தோம். அவர், வலுவாக இருந்த பகுதிகளிலேயே பந்துகளை வீசினோம். சூழ்நிலையை நாங்கள் விரைவாக சரி செய்யவில்லை. இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
சிஎஸ்கே கேப்டன் ருதுதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “கடந்த 4 ஆட்டங்களிலும் எங்களது பீல்டிங்கே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இது விமர்சிக்கத்தக்கதாக இருந்து வருகிறது. நாங்கள் தவறவிட்ட கேட்ச்களால் பேட்ஸ்மேன்கள் 15 முதல் 30 ரன்களை கூடுதலாக சேர்க்கிறார்கள். பீல்டிங்கை ரசித்து செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்பு பேசினேன். பதற்றமாக இருந்தால், கேட்ச்சை தவறவிடும் நிலை ஏற்படும். தனித்துவமான பீல்டராக இருந்தால் இரண்டு, மூன்று ரன்கள் எடுப்பதை தடுத்து ரன் அவுட் செய்யலாம். அது அணிக்கு உதவும்” என்றார்.