பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ’அமரன்’ படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. படம் வெளியாகி 5 வாரங்கள் கடந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருகிறது. மக்களிடையே பெற்ற வரவேற்பு காரணமாக உலகம் முழுவதும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், ‘அமரன்’ படக்குழுவினர் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். ‘அமரன்’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு மத்திய அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.