Home விளையாட்டு செய்திகள் இந்திய ஹாக்கியின் சரிவு: வெளிநாட்டு பயிற்சியாளருக்காக மாதம் ரூ.25 லட்சம் செலவு ஏன்? – ஸ்ரீஜேஷ்...

இந்திய ஹாக்கியின் சரிவு: வெளிநாட்டு பயிற்சியாளருக்காக மாதம் ரூ.25 லட்சம் செலவு ஏன்? – ஸ்ரீஜேஷ் கேள்வி

0

இந்திய ஹாக்கி அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து முன்னாள் நட்சத்திர கோல் கீப்பரும், இருமுறை ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களாக எஃப்ஐஎச் (FIH) புரோ லீக்கில் இந்தியா எட்டாவது இடத்தில் முடித்திருப்பது அணியின் தரம் குறைந்து வருவதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஸ்ரீஜேஷ், “நான் இந்திய ஹாக்கிக்கு எதிரானவன் அல்ல. நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். ஏனெனில் இந்த விளையாட்டை நான் நேசிக்கிறேன். என்னுடைய ஹாக்கி அறிவு குறைவாக இருக்கலாம்; இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. (நாற்காலியில் அமர்ந்த படியே பயிற்சியளிக்கும் கோச்சுகள் இதைத் தவிர்க்கலாம்.)

கடந்த இரண்டு எஃப்ஐஎச் புரோ லீக் சீசன்கள் உண்மையை வெளிப்படுத்திவிட்டன. நாம் எட்டாவது இடத்தில் முடித்தோம். அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கலாம். புதிய வீரர்களை முயற்சிக்கிறோம் அல்லது புதிய உத்திகளைப் பயன்படுத்துகிறோம் என்று சொல்ல வேண்டாம்” என்று பதிவிட்டார்.

2023-24 புரோ லீக் சீசனில் ஸ்ரீஜேஷ் வீரராக இருந்தபோது இந்தியா ஏழாவது இடத்தில் முடித்தது. அதன்பின்னர் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் வழிநடத்திய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

சமீபத்தில், இந்திய ஜூனியர் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தன்னை நீக்கி, பிரெஞ்சு பயிற்சியாளர் ஃபிரெடெரிக் ஜோயேஸ் நியமிக்கப்பட்டதை ஸ்ரீஜேஷ் விமர்சித்திருந்தார். ஸ்ரீஜேஷ் பயிற்சியில் இந்தியா ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது புதிய பதிவில், “நாங்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றோம். அணிக்கு வாழ்த்துகள். ஆனால், உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய ஹாக்கி உலக அளவில் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பிட இந்தத் தொடர்கள் இனி அளவுகோலாக இல்லை.

இப்போது வழக்கமான விளக்கம் என்னவென்றால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்தான் கவனம் செலுத்துகிறோம்; அதுவே ஒலிம்பிக் தகுதிச்சுற்று என்கின்றனர். அதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ப்ரோ லீக் தரவரிசை பொய் சொல்லாது. உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக நாம் எங்கு நிற்கிறோம் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. நமது ஜூனியர் அணி கூட பாகிஸ்தானை வெல்ல முடியும். அதனால் அந்த வெற்றியெல்லாம் ஒன்றும் பெரிதல்ல.

அது இந்தியாவுக்கும் மற்ற ஆசிய அணிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டுகிறது. ஆசிய அளவிலான போட்டிகளை வெல்வது எதிர்பார்க்கப்படும் விஷயம். ஆனால் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக தொடர்ந்து போட்டியிடுவதே உண்மையான சவால்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டு தலைமை பயிற்சியாளருக்காக செலவிடப்படும் தொகை குறித்து கேள்வி எழுப்பிய அவர், “ஆசிய அளவிலான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக மட்டுமா மாதத்திற்கு 24,286 யூரோக்கள் (சுமார் ரூ.25 லட்சம்) சம்பளமாக வழங்கி, வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளோம்?

அல்லது உலகக் கோப்பை, புரோ லீக் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கத்திற்காக போராடும் அணியாக இந்தியாவை மாற்றுவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறதா? உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக தடுமாறிக்கொண்டே இருந்து, பிராந்திய வெற்றிகளில் திருப்தி அடைவது இந்திய ஹாக்கிக்கான தரமாக இருக்கக்கூடாது” என்று சாடியுள்ளார் ஸ்ரீஜேஷ்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version