“ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது” – ரகுபதி

0
24

“ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது. வெற்றி 150 நாள் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம், தவெக அரசு சரணடைந்து விட்டது. எப்படி தேர்தலில் சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அது போல சத்தமே இல்லாமல் மத்திய அரசிடம் சரண்டர் ஆகிவிட்டீர்கள்” என திமுக எம்.எல்.ஏ ரகுபதி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, “நிதிநிலை அறிக்கையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொட்டால் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். சனிக்கிழமை அன்று பனையூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு வருவோர் எல்லாம், இதற்கு முன் தொட்டவர்கள் தான்.

வெற்றி 150 நாள் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம், தவெக அரசு சரணடைந்து விட்டது என்பதை காட்டுகிறது. எப்படி தேர்தலில் சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அது போல சத்தமே இல்லாமல் மத்திய அரசிடம் சரண்டர் ஆகிவிட்டார்கள்.

நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட் வாசித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து, லட்டு, புளியோதரையோடு வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் நாங்கள்.

உங்கள் தலைவரைக் காணவில்லை என்று சொன்னவருக்கு நாங்கள் சொல்கிறோம், அவர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், விடியல் பயணத் திட்டம் ஆகியவற்றில் இருக்கிறார். உங்களுக்கு ‘விடியல்’ பிடிக்காது என்பதால் திட்டத்தில் இருந்து விடியலைத் தூக்கிவிட்டீர்கள். நாங்கள் மீண்டும் தமிழகத்தில் விடியலை கொண்டு வருவோம்.

ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது; திட்டத்தில் 2 முதல் 3 லட்சம் பெண்கள் வருவார்கள். இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரம்; உங்கள் அதிர்ஷ்டம் தங்கம் ஒரு லட்சத்திற்கு வரட்டும். புடவை ரூ.10,000-க்கு வரட்டும்; ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை 1 லட்சமாக மாற்றினால்கூட அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் வேண்டும்.

200 யூனிட் மின்சாரம் பற்றிப் பேசினால் நீங்கள் கோபித்துக்கொள்வீர்கள். யாருக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை. 3 லட்சம் பேருக்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறீர்கள். இது குறித்து புகார் எழுந்துள்ளது. மகளிருக்கான ரூ.2,500 உதவித்தொகை கிடைக்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here