“கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெறுவது பெரும் சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

0
15

“மாத வாரியாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெறுவது பெரும் சவாலாக உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் ஆனந்த், “காவிரி நீர் உயிர் ஆதாரமாக உள்ளது. காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாய ஆதாரமாகவும், மற்ற மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு ஆணைகள் மூலம் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. இருந்தாலும், மாத வாரியாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெறுவது பெரும் சவாலாக உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வரால் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, அதற்கான நாள் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி என முடிவு செய்யப்பட்டது.

அதற்கிடையில் கர்நாடக முதல்வர் அந்த நாள் பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.

இதன்மூலம், 29.07.2026 முதல் 12.08.2026 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று ஆணையம் அறிவுறுத்தியது.

ஆனால், கர்நாடகாவுக்கு அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது. இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.

எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 29.07.2026 முதல் 02.08.2026 வரை 3,500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி வரை மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.

எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.2026 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2026 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு 03.08.2026 அன்று எழுதிய கடிதத்தில், 31.07.2026 முதல் கர்நாடகாவின் நான்கு அணைகளுக்கு வரும் நீர் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழகத்துக்கான விகிதாச்சார பங்கீட்டை மறுபரிசீலனை செய்து 12.08.2026க்குள் 26.594 டிஎம்சி நீர் வந்து சேரும் வகையில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்த குறைவான நீர்வரத்து காரணமாக ஜூன் 12ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை.

தென்மேற்கு பருவமழை 04.06.2026 அன்று தொடங்கிய போதிலும், மழைப்பொழிவு வழக்கத்தை விட குறைவாக இருந்ததால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாக இருந்தது.

கர்நாடக அணைகளில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 காலை நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரில் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்வரத்து, குடிநீர் பாதுகாப்பு போன்ற சூழலை கருத்தில்கொண்டு பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறப்பது குறித்து முடிவுசெய்யப்படும்

காவிரி விவகாரம் மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமருக்கு இரு முறை நேர்முக கடிதம் எழுதியுள்ளார். இதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தலைமையிலான தவெக அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here