ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
ஈஷா சார்பில் கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா நடப்பு மாதம் தொடங்கியது. முதல்கட்ட போட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 162 இடங்களில் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த 43,144 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான போட்டிகள் 6 இடங்களில் நடத்தப்பட்டன. இவற்றில் 136 அணிகளும், 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டி நேற்று ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெற்றது.
ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த ‘அலிப் ஸ்டார்’ அணி, உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி ஆகியவை முதலிரண்டு இடங்களைப் பிடித்தன. பெண்களுக்கான த்ரோபால் இறுதிப் போட்டியில், கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்து அணி, தமிழகத்தின் புள்ளாக்கவுண்டன்புதூர் கிராம அணி ஆகியவை முதலிரண்டு இடங்களைப் பிடித்தன.
மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளில் கோவை, கிருஷ்ணகிரி அணிகள் முதலிரண்டு இடத்தை பிடித்தன. முன்னதாக, நேற்று நடந்த இறுதிப் போட்டிகளை சத்குரு தொடங்கிவைத்தார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சத்குரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் சத்குரு பேசும்போது, “நம்மிடமுள்ள புத்திசாலித்தனம், திறமை, உறுதி உள்ளிட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்பட நாம் புத்துணர்வுடனும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். கிராமப்புற வீரர்களிடையே புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது” என்றார்.
தொடரில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ.5 லட்சம், இரண்டாமிடம் பிடித்த அணிகளுக்கு ரூ.3 லட்சம், 3, 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டன.