பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழைகாரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 16 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர்.
4-வது விக்கெட்டுக்கு சைம் அயூப்புடன் இணைந்த சவுத் சகீல் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். 110 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியைஹசன் மஹ்மூத் பிரித்தார். சைம் அயூப் 98 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார்.முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சவுத் சகீல்57, முகமது ரிஸ்வான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க பாகிஸ்தான் அணி இன்று2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.