நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
தொடக்க வீரரான 26 வயதான எமிலியோ கே அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஸாக் கிராவ்லி நீக்கப்பட்டுள்ளார். இதேபோன்று ஆலி போப்புக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. கவுண்டி போட்டிகளில் எமிலியோ கே 3 சதங்கள் விளாசி சிறந்த பார்மில் இருப்பதால் அவர், தேசிய அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான சோனி பேக்கர், விக்கெட் கீப்பரான ஜேம்ஸ் ரியூ ஆகியோரும் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் ஆலி ராபின்சன், கஸ் அட்கின்சன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அவரது பெயர் அணித் தேர்வின் போது பரிசீலிக்கப்படவில்லை. மார்க் வுட்டுக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், எமிலியோ கே, ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், மேத்யூ ஃபிஷர், ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ரேஹான் அகமது, ஷோயப் பஷீர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், ஜோஷ் டங்.
