தரமணி பாலிடெக்னிக் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை? – போராட்டம் நடத்திய எஸ்.எஃப்.ஐ – போலீஸார் இடையே மோதல்

0
46

தரமணியில் பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்திடம் நீதி கேட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மற்றும் போலீஸாரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், முதலாமாண்டு படித்துவந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் தனது ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரத்துக்கு பிறகு சக மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி உள்ளார்.

விடுதிக்கு திரும்பிய மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி அவரது ஆண் நண்பரை சந்திக்க சென்றதாகவும், ஆனால் எங்கு சென்றார் என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காணாமல் போன மாணவி, மறுநாள் சனிக்கிழமை காலை விடுதிக்கு திரும்பியுள்ளார். ரத்த காயங்களுடன் வந்த மாணவியிடம் விடுதி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பரைச் சந்திக்க சென்றதாகவும், அவர் போதை பொருளை தனக்குக் கொடுத்து, ஆண் நண்பருடன் சேர்ந்து சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததோடு, அந்த மாணவிக்கு ‘டீசி’ கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எஃப்.ஐ), கல்லூரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரிக்குள் போராட்ட மாணவர்கள் திடீரென நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இறுதியில் போராட்ட மாணவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here