தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
‘குரோதி’ ஆண்டு நிறைவடைந்து, ‘விசுவாவசு’ தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடைகள் அணிந்து உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மலையாள புத்தாண்டான விஷு திருநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், கேரளா மட்டுமின்றி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் விஷு கனி தரிசன நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவே, வீடுகளில் உள்ள பூஜை அறையில் சுவாமி முன்பு முக்கனிகள், கண்ணாடி, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்தனர். நேற்று காலையில் புத்தாண்டு பிறந்ததும், கண்ணாடி, முக்கனிகள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை தரிசித்து, புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு நாணயங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள் போன்றவற்றை ‘கைநீட்டம்’ வழங்கி பெரியவர்கள் ஆசி வழங்கினர். கோயில்களிலும் பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது.
கோயில்களில் அதிகாலையில் இருந்தே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அதிகாலை முதலே கோயில்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களிலும், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், வடபழனி ஆண்டவர், மதுரை மீனாட்சியம்மன், காஞ்சி காமாட்சியம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார், வேலூர் ஜலகண்டேஸ்வரர், கோவை கோணியம்மன், மருதமலை, திருச்சி மலைக்கோட்டை, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிதம்பரம் நடராஜர், சேலம் சுகவனேஸ்வரர், நாமக்கல் ஆஞ்சநேயர், திருநெல்வேலி நெல்லையப்பர், குற்றாலம் குற்றாலநாதர், கன்னியாகுமரி பகவதி அம்மன், நாகர்கோவில் நாகராஜா உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலையே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர் விடுமுறை காரணமாக கோயில்களில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், ஏலகிரி மலை, பழவேற்காடு ஏரி, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, தஞ்சை பெரிய கோயில், குமரி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து, புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடினர். ஏராளமானோர் திரண்டதால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே கோயம்பேடு மலர் சந்தை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மலர் சந்தைகளில் வியாபாரிகள் குவிந்திருந்தனர். இதனால் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், “தமிழ் மொழிக்காக ஒரு நினைவு சின்னத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது” என அறிவித்து, அதன் டிஜிட்டல் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டை முன்னிட்டு, தனது எக்ஸ்தள பக்கத்தில் “மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள்: இந்த புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்” என பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் நேற்று தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.