ஏற்றுமதி, உயர்கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

0
91

தமிழகம் 897 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஏற்றுமதி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த மகத்தான பணிகள் பாராட்டப்பட்டன.

முதல்வரின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10 லட்சத்து 27,547 கோடி முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என புகழப்படுகிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-ல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையை பெற்றுள்ளது தமிழகம்.

வேலைவாய்ப்பு: கடந்த 2020-2021-ல் 2.9 கோடியாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 2024-2025-ல் 3.87 கோடியாக உயர்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம் முதலான புரட்சிகரமான திட்டங்களால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26 சதவீதம். 2023-2024-ல் 51.3 சதவீதமாக உயர்ந்து தமிழகத்தின் மகத்தான சாதனையை வெளிப்படுத்துகிறது.

முதல்வரின் சீரிய நிர்வாக திறன்களால் மாநிலம் எங்கும் பெரிய அளவில் சாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்சினைகளோ இல்லாமல் கடந்த 4 ஆண்டு காலமும் தமிழகத்தில் அமைதி நிலவுவது, மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

2022 ஆகஸ்ட் முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றவிகிதம் 1 லட்சம் மக்கள் தொகையில் இந்தியாவில் 66.4. ஆனால், தமிழகத்தில் 24 என வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2023-2024-ம் ஆண்டுக்கான அவ்தார் நிறுவன ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்த பாதுகாப்பான நகரம் சென்னை என பாராட்டப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம். ஏற்றுமதி தயார் நிலை, தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம். புத்தாக்கத் தொழில்கள் தரவரிசை பட்டியலில் 2022 முதல் முதலிடம். பெண் காவல் அதிகாரிகளை கொண்டுள்ளதில் தமிழகம் முதலிடம். இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பில் தமிழகம் 38 சதவீதத்துடன் முதலிடம். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். வறுமை ஒழிப்பில், தொழிற்சாலைகள் மற்றும் அதிக தொழிலாளர்கள் அகிர பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம். பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழகம் முதலிடம்.

அதிக தொழிற்சாலைகளை கொண்டுள்ளதில் தமிழகம் முன்னணி மாநிலம். உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவீத வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here