தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் பள்ளிக்கான நிலங்களை அடையாளம் காண்பது குறித்து 3 வாரத்துக்குள் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நவோதயா பள்ளிகள் விஷயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை கடந்த ஜன.5-ம் தேதியிட்ட கடிதம் மூலம் ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்விக் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. தவிர, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான முன்மொழிவை வெறும் நிர்வாக முன்மொழிவாக மட்டுமே கருத முடியாது.
மத்திய அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, மாநில அரசால் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட கேள்விகளையும் இந்த வழக்கு எழுப்புகிறது.
மத்திய அரசின் நிர்வாகக் கொள்கை மூலமாகவோ, நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, மாநிலச் சட்டத்துக்கு முரணான வகையில் செயல்படுமாறு கட்டாயப்படுத்த முடியுமா என்ற கேள்வியையும் இந்த வழக்கு எழுப்பியுள்ளது.
கல்வி என்பது பொதுப் பட்டியலில் வருவதால், இதில் சட்டம் இயற்றவும், கொள்கை வகுக்கவும் மாநில சட்டப்பேரவைக்கும் முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2006-ம் ஆண்டு தமிழ் கற்றல் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு மாநில அரசின் சொந்தச் சட்டங்களுக்கு முரணான மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்த முடியாது. எனவே, நவோதயா பள்ளிகள் நிறுவுவதை கட்டாயமாக்கவோ, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசைக் கட்டாயப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
மேலும், நிலம் தொடர்பான விஷயங்கள் மாநில விருப்புரிமைக்கு உட்பட்டவை என்பதால், ஒரு மாநிலத்திடம் அதன் நிலத்தை ஒப்படைக்கவோ, ஒதுக்கீடு செய்யவோ நீதிமன்றம் கட்டாயப்படுத்தி உத்தரவு பிறப்பிக்க முடியாது.
எனவே, நவோதயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணுமாறு கடந்த 2025 டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
