காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வளாகத்தில் சந்தன மரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் இர.நரேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை: காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சந்தன மரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு, வர்தா புயலின் தாக்கத்தால் விழுந்து காய்ந்த தேக்கு மரங்கள், பல்கலைக்கழகத்தால் முறையாக அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினரால் ஏல முறையில் ஏற்கெனவே அகற்றப்பட்டன.
தற்போது, பராமரிப்பு காரணங்களால் உயர்மட்ட மின் பாதைகள் மற்றும் நீர்க் குழாய்களின் அருகே இடையூறாக இருந்த மரக்கிளைகள், கால்நடைகளுக்கு பசுந்தீவனத்துக்கு கழிக்கப்படும் கிளைகள் மட்டுமே அகற்றப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் விலை நிர்ணயக் குழுவால் அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்து, பல்கலைக்கழக கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை ஆராய்ச்சி மையம் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது. அங்கீகரிக்கப்படாத யாரும் உள்ளே நுழையவோ, மரங்களை அப்புறப்படுத்தவோ வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
