உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.
தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகர்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனி தான். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்களும், 300 பயிற்சியாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சமீபத்தில் அவர் ஊடகங்களின் வாயிலாக தெரிவித்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தன் உடல்நிலை குறித்தும், வில்வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் கடிதம் அனுப்பியிருந்தார். அதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.