அறுபது வயது நிறைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஹெக்டர் நிலத்துக்கு கீழ் உள்ள விவசாயிகள் மட்டுமே இதில் இணையலாம் என வரன்முறை உள்ளதால் இதர விவசாயிகள் இத்திட்டத்தில் இணைய முடியாது.
இத்திட்டத்தில் 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தான் இணையமுடியும். இந்தத் திட்டத்தில் இணைந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை வயதுக்கு ஏற்ப இணைவோர் வைத்துள்ள வங்கிக் கணக்கிலிருந்து பிரீமிய தொகையை அரசு எடுத்துக் கொள்ளும்.
இயற்கையோடு போராடி எவ்வகை இழப்பு ஏற்பட்டாலும் ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.10,000 தரப்பட வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
எந்தத் தொகையும் பெறாமல், 60 வயது நிறைந்த சிறு, குறு, பெரு விவசாயிகள் அனைவருக்கும் அரசே இந்த தொகையை வழங்க வேண்டுமே தவிர, சிறு சேமிப்பு திட்டம் போல காப்புத் தொகை பெறுவதும், விவசாயிகளிடையே பாகுபாடு காட்டும் வகையில் இத்திட்டத்தை அமல்படுத்துவதும் நம்பிக்கை மோசடியாகும்.
எனவே விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று எந்த நிபந்தனையும் இன்றி மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.














