ஜூன் 11-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்: பாஜக வளர்ச்சியை தடுக்க முக்கிய ஆலோசனை

0
61

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னையில் கூடுகிறது. அதில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வென்றுள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் காங்கிரஸின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய்குமார் முன்னிலையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இத்தேர்தலில் வெற்றி வெற்ற எம்பி-க்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட 711 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக பல தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றது குறித்தும், வரும் காலங்களில் அதன் வளர்ச்சியை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை தமிழகத்தில் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.