சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட்: 28 பந்துகளில் சதம் விளாசி உர்வில் படேல் சாதனை

0
23

சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் – திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திரிபுரா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57, ஸ்ரீனிவாஸ் 29 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் அர்சான் நாக்வஸ்வாலா 3, சிந்தன் கஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலின் அதிரடியால் 10.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உர்வில் படேல் 28 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனை படைத்தார் 26 வயதான உர்வில் படேல். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சையது முஸ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், இமாச்சல்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் உர்வில் படேல்.

மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் உர்வில் படேல் பெற்றுள்ளார். இந்த வகையில் எஸ்டோனியாவின் சாஹில் சவுஹான் கடந்த ஜூன் மாதம் சைப்ரஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 27 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் உர்வில் படல் ஒட்டுமொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 12 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான ஆர்யா தேசாய் 24 பந்துகளில், 38 ரன்கள் சேர்த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here