“விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனம்” – உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து கருத்து

0
79

வழக்குகளில் துரித விசாரணை மூலம் விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனமாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். நாகமுத்து தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860, தற்போது பாரதிய நியாய சன்ஹிதா – 2023 (பிஎன்எஸ்) என்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் – 1973, தற்போது பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா – 2023 (பிஎன்எஸ்எஸ்) என்றும் இந்திய சாட்சியச் சட்டம் – 1872, தற்போது பாரதிய சாக் ஷய அதிநியம் – 2023 (பிஎஸ்ஏ) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு மாற்றங்களுடன், இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இந்த புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் மையம் சார்பில் தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.நாகமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து முதலில் ஊடகவியலாளர்களுக்கு சரியான புரிதல்கள் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சட்டங்கள் தொடர்பாக செய்திகளை வெளியிடும்போது பொறுப்புடனும், பொதுநலனுடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டிய கடமையும், கட்டுப்பாடும் செய்தியாளர்களுக்கு உள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களின் அடையாளங்களை ஒருபோதும் பொதுவெளியில் அம்பலப்படுத்தக்கூடாது. அதுபோன்ற செய்திகளில் பெயர்கள் உள்ளிட்டவற்றை வெளியிடாமல் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளில் மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு செய்திகளை வெளியிடக்கூடாது.

வரும் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ்தான் பதிவு செய்யப்படும். ஆனால் ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும் மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படும். அதன்படிதான் விசாரணையும் நடைபெறும். இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் தற்போதைய தேவையறிந்து காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சின்ன சின்ன குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்காமல் அவர்களை பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்தி சேவை செய்ய வைப்பது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட காலஅளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் இதில் இருந்தாலும் காலனி ஆதிக்கச்சட்டங்களை மாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயமும் உள்ளது. வழக்குகளில் துரித விசாரணை மூலம் விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் லீனா மீனாட்சி, பத்திரிகை தகவல் மைய இணை இயக்குநர் பி.அருண்குமார், துணை இயக்குநர் ஜெ. விஜயலட்சுமி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் கவுரி ரமேஷ், பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீன் பாலாஜி பங்கேற்றனர்.