நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று அந்நாட்டு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா கூறுகையில், “நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி, வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பி.டி.ஐ. கட்சி வரவேற்றுள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுல்ஃபிகார் புஹாரி கூறுகையில், “நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்புக்குரியது. அவரது கண் பார்வையும் ஒட்டுமொத்த உடல்நலனும் மேலும் மோசமடைவதற்கு முன்பாகவே இந்த உத்தரவு வந்திருக்க வேண்டும். மருத்துவர்கள் முழு திருப்தி அடையும் வரை அவர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி தனது எக்ஸ் தள பதிவில், “இம்ரான் கானுக்கு மன அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. தனிமைச் சிறை அவரது உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகச் சுதந்திரமான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.















