கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குஜராத் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அரசும், காவல் துறையும் அளித்த தகவலின் பேரில் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
இருப்பினும், கணக்குகளை முடக்குவதற்கான எந்தவொரு முறையான காரணமும் அல்லது முன்னறிவிப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் இருந்தால் அதனை நீக்கி விட்டு ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில சமூக வலைதளக் கணக்குகள் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.















