சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் துள்ளல் நடனமிட்டு நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்

0
85

இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட இந்த விண்கலனில் இருவரும் சுமார் 27 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர். அங்கு சுமார் 8 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஸ்டார்லைனரின் இந்த வெற்றிப் பயணம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லைனர் விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்தது. இதன் பின்னணியில் சுமார் பத்து ஆண்டு கால உழைப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்கலனில் விண்வெளி வீரர்களை அனுப்புவது என நாசா திட்டமிட்டது. இருந்தும் பல்வேறு முறை அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதன் ஒப்பந்த மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள். இந்த சூழலில் தற்போது அதன் முதல் பயணம் சக்சஸ் ஆகியுள்ளது.