நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் அளித்த மாணவி: நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்

0
63

தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கான ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும் தன் மனுவில் கோரி இருந்தார்.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அம்மாணவியின் விடைத் தாள் தொடர்பான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அம்மாணவியின் விடைத் தாள் எந்த சேதாரமும் இல் லாமல் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து அம்மாணவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி மீது தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறிய நிலையில், மனுவை திரும்பப் பெறுவதாக மாணவி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நீட் தேர்வு எழுதிய மாணவி ஆயுஷி படேல், தன்னுடைய விடைத் தாள் கிழிந்து விட்டதால் தன்னுடைய மதிப்பெண் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தன்னுடைய பக்கத்திலும் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.