உ.பி.யில் சட்டப்பேரவையின் 9 உறுப்பினர்கள் மக்களவைக்கு போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டனர். இதனால், அந்த 9 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன், சிஷாமா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டனை பெற்றுள்ளார். இதனால் சிஷாமாவுக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
உ.பி.யில் 4 முறை முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) போல் தலித் ஆதரவு பெற்றவராக சந்திரசேகர் ஆசாத் எனும் ராவண் வளர்ந்து வருகிறார். பீம் ஆர்மியின் நிறுவனரான இவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நகீனா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இவரது ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்), உ.பி. இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனால் பாஜகவுக்கு சாதகமாக வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
உ.பி.யில் இடைத்தேர்தலை சந்திக்கும் இந்த 10 தொகுதிகளில் பெரும்பாலானவை பாஜக வெற்றி பெற்றவை. உ.பி. சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங்யாதவும் தனது கர்ஹால் எம்எல்ஏபதவியை ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு முக்கிய தொகுதியாக அயோத்தியின் மில்கிபூரும் உள்ளது.
மில்கிபூர், அயோத்தியைஉள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் லல்லு சிங் தோல்வி அடைந்தார். மூன்று முறை எம்.பி.யான லல்லு சிங்கை சமாஜ்வாதியின் தலித் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் தோற்கடித்தார். இதனால், மில்கிபூரில் வெற்றி பெறுவது பாஜகவின் கவுரவ பிரச்சினையாக உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாதிதலைவர் அகிலேஷ் சிங்குடன் காங்கிரஸின் ராகுல் கைகோத்து இருந்தார். இதன் பலனாக, சமாஜ்வாதிக்கு 37, காங்கிரஸுக்கு 6 தொகுதிகளில் எதிர்பாராத வெற்றி கிடைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட குறைவாக வெறும் 36 இடங்கள் கிடைத்தன.
எனவே, இடைத்தேர்தலுடன் சேர்த்து 2027 உ.பி. சட்டப்பேரவை தேர்தல் வரை அகிலேஷ், ராகுலின்கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் ராவண்கட்சியின் போட்டியால் இடைத்தேர்தலில் அகிலேஷ் – ராகுலுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. 2014, 2024 மக்களவைத் தேர்தல்களில் பிஎஸ்பி ஒரு தொகுதிகூட பெறவில்லை. 2019-ல் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்ததால் 10 எம்.பி.க்களை பெற்றார் மாயாவதி. இவர் உ.பி.யில் இழந்து வரும் தலித்ஆதரவை தற்போது பீம் ஆர்மியின் ராவண் பெற்று வருகிறார்.