சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

0
255

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

35 வயதான ஸ்டார்க், கடந்த 2012-ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார். மொத்தம் 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருந்தார். இந்த சூழலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

“இப்போதும், எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். ஆஸ்திரேலிய அணிக்காக நான் விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் இனிதானது. கடந்த 2021-ல் நாங்கள் டி20 உலகக் கோப்பையை வென்றோம்.

எதிர்வரும் ஆஷஸ் தொடர், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர், 2027-ல் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வகையில் நான் என்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் என்னால் உடற்தகுதியுடன் இருக்க முடியும். அதேநேரத்தில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான பந்துவீச்சை யூனிட்டை தயார் படுத்தவும் இது வாய்ப்பளிக்கும் என கருதுகிறேன்” என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின்னர் 2 ஒருநாள் போட்டியில் மட்டுமே கம்மின்ஸ் விளையாடி உள்ளார். இந்த சூழலில் அனுபவ வீரர்கள் அதிகம் இல்லாமல் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடும் சூழலில் உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here