பிரான்ஸ் கனவைத் தகர்த்த ஸ்பெயின் இறுதிக்கு முன்னேற்றம் | FIFA WC 2026

0
22

டெக்சாஸில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு மிகேல் ஓயர்சபால் பெனால்டி கிக்கில் கோல் அடித்து முன்னிலை கொடுக்க, பிறகு 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ அற்புதமான கோலை அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

ஸ்பெயின் தனது ஆதிக்கமான ஆட்டத்தின் மூலம் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி, போட்டி முழுவதும் ஸ்பெயின் கொடுத்த அழுத்தத்துக்குப் பதிலளிக்க முடியாமல் ஏமாற்றமளித்தது.

போட்டியின் தொடக்கம் முதலே பந்தை அதிக நேரம் தக்கவைத்துக் கொண்ட ஸ்பெயின், பிரான்சின் தாக்குதல் வரிசைக்கு எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை. குறிப்பாக கூடுதல் நேரத்தில் கைலியன் எம்பாப்பே எடுத்த கடைசி முயற்சி கோலுக்கு மேலாக பறந்தபோது, அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றம் பிரான்ஸின் போதாமையையும் போட்டியின் முடிவையும் அறிவித்தது.

பெனால்டியில் முன்னிலை

20-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி கிடைத்தது. பிரான்ஸ் இடது பக்க தற்காப்பு வீரர் லூகாஸ் டின்யே, ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லமின் யமாலை பெனால்டி பகுதியில் தவறுதலாகத் தடுத்ததாக நடுவர் தீர்ப்பளித்தார். அந்த வாய்ப்பை மைக்கேல் ஒயர்சபால் கோலாக மாற்றி ஸ்பெயினை 1-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

முதல் பாதியில் தொடர்ந்து தவறுகள் செய்த பிரான்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. 30-வது நிமிடத்தில் முதுகு காயம் காரணமாக பிரான்சின் சென்டர்-பேக் வில்லியம் சாலிபா களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

போரோவின் அபார கோல்!

இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸ் சற்று முன்னேற்றம் கண்டாலும், அந்த வேகத்தை ஸ்பெயின் விரைவில் முறியடித்தது.

வலது பக்க தற்காப்பு வீரர் பெட்ரோ போரோ, மத்தியநிலை வீரர் டானி ஒல்மோவுடன் அழகிய ‘ஒன்-டூ’ பாஸ் பரிமாற்றத்தை மேற்கொண்டு, கோல்கீப்பர் மைக் மேன்யானை எளிதாக ஏமாற்றி இரண்டாவது கோலை வலைக்குள் செலுத்தினார்.

ஸ்பெயினின் தந்திரத்துக்கு பதில் சொல்ல முடியாத பிரான்ஸ்!

போட்டி முழுவதும் உத்தி ரீதியான திறனையும், பந்துக் கட்டுப்பாட்டையும் ஆயுதமாக பயன்படுத்திய ஸ்பெயின், பிரான்ஸின் வேகமான எதிர்தாக்குதலை முற்றிலும் முடக்கியது.

பிரான்ஸ் நடுக்கள வீரர்களான அட்ரியன் ரபியோ மற்றும் ஓரேலியன் சுவாமேனி ஆகியோர் ஸ்பெயின் மிட்ஃபீல்டின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும், ஸ்பெயினின் இடைவிடாத அழுத்தமான தடுப்பாட்டம் காரணமாக பிராட்லி பார்கோலா, ஒஸ்மான் டெம்பேலே மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரின் வேகத்தை பயன்படுத்தி எதிர்தாக்குதல் நடத்தும் வாய்ப்பையும் பிரான்ஸ் இழந்தது.

நால்வரை முடக்கிய ஸ்பெயின்:

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த எம்பாப்பே, மைக்கேல் ஒலிசே, பார்கோலா, டெம்பேலே ஆகியோரைக் கொண்ட பிரான்ஸின் தாக்குதல் நான்மணிகள் மிக முக்கியமான அரையிறுதியில் முற்றிலும் செயலிழந்தது.

ஸ்பெயினின் ஒழுங்கான தடுப்பரணும், தந்திரமான ஆட்டமும் அவர்களை சாதாரண அணியாகவே தோற்றமளிக்கச் செய்தது. தனிப்பட்ட வீரர்களாகவும் ஓர் அணியாகவும் பிரான்ஸ், ஸ்பெயினின் நடுக்கள மற்றும் டிஃபெண்டர்களால் முடங்கிப் போகச் செய்யப்பட்டது.

இறுதிப் போட்டி யாருடன்?

2010 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள ஸ்பெயின், நியூ ஜெர்சியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது அர்ஜென்டினா அணிகளில் ஒன்றை எதிர்கொள்ள உள்ளது.

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய அனுபவத்துடன் இருக்கும் ஸ்பெயின், மறுபுறம் 2025 ஃபைனலிசிமா போட்டியில் சந்திக்க வேண்டியிருந்த அர்ஜென்டினாவுடன் இம்முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. அந்த ஃபைனலிசிமா போட்டி, ஈரான் போர் மற்றும் நெருக்கடியான சர்வதேச போட்டி அட்டவணை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

ஸ்பெயின் அணியை பலவீனமானதாகக் கருதிய அனைவருக்கும் இந்த வெற்றி ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here