முன்னாள் போர்ட் எலிசபெத் அல்லது இப்போது பெயர் மாற்றப்பெற்ற கெபர்ஹா மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் சுமார் 145 ஓவர்கள் மழையினால் விரயமானாலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதிக்க முடியாத ஒரு அரிய வெற்றியைச் சாதித்தது. அதுவும் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் தோல்வி அடையச் செய்து தொடரை 1-1 என்று சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) 5-ம் நாள் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்க முடியாத வகையில் மழை விளையாட ஆரம்பித்தது. சரி! ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு கிரேட் எஸ்கேப்தான் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஆட்டம் தொடங்கியது. ஸ்காட் போலண்ட், டிராவிஸ் ஹெட் அசாத்திய தடுப்பு உத்தியுடன் ஆடினர்.
ஒரு புறம் மேகம் திரண்டு கொண்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. அடுத்த மழை வந்தால் நிச்சயம் ஆட்டம் நடைபெற்றிருக்காது. அதற்குள் போட்டியை முடிக்க வேண்டும் என்ற புற அழுத்தம் தென் ஆப்பிரிக்காவை பாதிக்கவில்லை. தங்கள் கடமையை முழு வலுவுடன் நிறைவேற்றி கடினமான ஒரு வெற்றியைச் சாதித்தனர்.
கொல்கத்தாவில் 2001-ல் ஃபாலோ ஆனுக்குப் பிறகு முன்னாள் வீரர்கள் லஷ்மண், திராவிட் மூலம் மீண்டெழுந்து, இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்குச் சமமான வெற்றி இது. அதுவும் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள், பிறகு 6 விக்கி இழப்புக்கு 110 ரன்கள் என்ற நிலையிலிருந்து கேப்டனாக ஒரு சிறந்த தலைமைத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக ஆடிய தெம்பா பவுமா, 179 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸ் ஆல் டைம் கிரேட் டெஸ்ட் இன்னிங்ஸில் இடம்பெறக்கூடிய வகையில் ஆடியுள்ளார். அவருடன் ஆல்ரவுண்டர் யான்சன், மற்றும் சைமன் ஹார்மர் இருவரும் 80+ ரன்களைக் குவித்து முக்கியமான கூட்டணி அமைக்க, 425 ரன்களுக்குக் கொண்டு சென்றது உண்மையில் தென் ஆப்பிரிக்கா போன்ற உறுதியான மனநிலை கொண்ட அணியினால் மட்டுமே முடியக்கூடியது.
இந்த வெற்றி இந்தியாவுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வருவதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் அடித்தளத்தையே அசைத்து அவர்களை சுயபரிசோதனைக்குத் தள்ளிய தென் ஆப்பிரிக்க வெற்றி என்பதில் ஐயமில்லை.
அதோடு இல்லாமல் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான சூழ்நிலையிலும் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸை 99 ரன்களுக்கு மடித்ததன் பின்னணியில் உண்மையில் கடினமாக உழைத்த பந்து வீச்சு, ஓய்வு ஒழிச்சல் இல்லாத வகையில் கடினமான லெந்த்களில் வீசி ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் அளித்தது, பவுமாவின் அருட்சி (Inspiring) மிக்க கேப்டன்சி என்று ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை பார்த்த திருப்தி மட்டுமல்லாது விளையாடிய வீரர்களுக்கே ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை ஆடிய நிறைவு தந்திருக்கும்.
டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியாவின் ஒரே வீரர், சதமெடுக்கும் திறமை கொண்ட வீரர். நீண்ட நேரம் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்குத் தடையாக நின்றிருந்தார். ஆனால் அவர் சதம் எடுத்த பிறகே 121 ரன்களில் முல்டர் பந்தில் பவுல்டு ஆக, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் சரிவடையத் தொடங்கியது.
பாட் கம்மின்ஸ் கூறியது போல் “சில தோல்விகள் நம்மிடையே கேள்விகளை ஏற்படுத்துவதாகும்”. உண்மையான கேப்டன்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் ஓட்டைகளை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு தோல்வி அடைந்த அணி ஏன் தோல்வி அடைந்தது என்பதை ஆராய்வதை விட முதல் டெஸ்ட்டில் தோற்று விட்டு, பிறகு 2-வது டெஸ்ட்டில் பெரும்பான்மை போட்டி மழையால் பாதிக்கப்பட்ட பிறகு வெற்றியைச் சாத்தியமாக்கிய தென் ஆப்பிரிக்காவின் வெற்றி குறித்தே பேச்சு எழுந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.
எந்த விளையாட்டாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெறுவது எப்படி என்பதாகத்தான் சிந்தனை இருக்கும். ஆனால், சூழ்நிலைகள் பெரும் தடையாக, நம் கையில் இல்லாத ஒரு சூழ்நிலை ஆதிக்கம் செலுத்தும் போது வெற்றிக்கான உத்திகள் எப்படி வகுக்கப்பட்டன என்பதில்தான் தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றி உண்மையில் நிபுணர்களுக்கு ஒரு ஆய்வுக்கான பொருளாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பவுலர் ஆன்ரிச் நோர்க்கியா காயமடைந்த போதிலும் வியான் முல்டர் தனது சறுக்கும் இன்கட்டர் பந்துகள் மூலம் பவுல்டுகளாக எடுத்துத் தள்ளி விக்கெட் எடுக்க முடியுமா என்ற கேள்வி எழும் போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். ரபாடா ஒவ்வொரு முறையும் டெஸ்ட்டிற்குத் திரும்பும் போதும் தான் ஏன் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சின் தவிர்க்க முடியா தலைமை என்பதை நிரூபித்துக் கொண்டு வருகிறார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் மேடின்சன், லபுஷேன், ஸ்மித், வெப்ஸ்டர் என்று மொத்த முதுகெலும்பே பலவீனமடைந்து உள்ளது. கேப்டவுன் டெஸ்ட்டிற்குள் ஆஸ்திரேலியா மீண்டெழுமா என்பது சந்தேகம்தான். ஆனால், சாம்பியன் அணிகள் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கண்டுப்பிடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே தெம்பா பவுமாவின் தொடரை இழக்காத சாதனை தொடருமா என்பதுதான் அடுத்த சுவாரஸ்யம்.














