மறைந்த பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு (கேகே) டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். மேலும் கேகேவின் பிரத்யேக ஓவியத்தின் கீழ், “இந்த டூடுல் ஆன்மாவை வருடும், காதல் பாடல்களைக் கொடுத்த பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996-ல் அவர் இதே நாளில் (அக்.25) தான் தன் முதல் திரைப்படப் பாடலைப் பாடி பின்னணி பாடகராக அறிமுகமானார். Chhod Aaye Hum என்ற பாடலை மாச்சிஸ் திரைப்படத்தில் பாடி அவர் பிரபலமானார்.
பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 1968 ஆகஸ்ட் 23-ல் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணகுமார் குன்னத். திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. 1996 முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் முதன் முதலில் அவர் திரையில் பாடினார்.
தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரி நிகழ்வில் பங்கேற்றிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது அகால மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காலப்போக்கில் மறைந்து போகும் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இன்று கேகேவுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.