தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு (பெப்சி), 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இதன் தலைவராக ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 5-வது முறையாக பெப்சி தலைவராகியுள்ள அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: தமிழ் சினிமா தற்போது சிரமமான நிலையில் இருக்கிறது.
அதாவது சில திரைப்படங்கள் பல கோடி வசூலை எட்டுவதும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் கூட வெளியிட முடியாத சூழலிலும் இருக்கின்றன.
நான் இயக்குநராக அறிமுகமாகும்போது சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றன.
இப்போது ஒரே படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படுவதும் பல திரைப்படங்களுக்குத் திரையரங்குகளே கிடைக்காத சூழலும் உள்ளன.
இதனால் சிறிய படங்களைத் தயாரிப்பதும் அதில் பணி புரிவதும் கடினமாக உள்ளது. எனவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு சிறிய வேண்டுகோளை வைக்கிறோம்.
தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் இருப்பது போல தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்று இருந்தால் ஓர் அரசின் கீழ் இயங்குகின்ற அமைப்பாக திரைத்துறை மாறும். அப்படி மாறினால் தொழிற்சாலை போன்ற பாதுகாப்பும் கட்டமைப்பும் ஏற்படும்.
எனவே தமிழக முதல்வர், தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழ்த் திரைத்துறையை ஒன்றிணைக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.















